‘அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்’ - செப்.24-ல் சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் செப்.24-ல் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செப்.13) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் திமுக அரசின் கவனத்தை ஈர்த்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக,
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. மேலும், திமுக அரசின் முதலமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.

திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, போதை மாத்திரைகள், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டால், குற்றவாளிகள் தங்கள் நிலையை மறந்து திருட்டு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றனர்.

11.9.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையின்போது, “தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்புக் குழு போடுவோம்” என்று திமுக அரசை எச்சரித்துள்ளது. இதுபோன்ற நிலைமை இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டதில்லை.

ஊடகங்களில் நாள்தோறும் வரும் செய்திகளில் பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் அன்றாடம் அல்லல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. அந்த வகையில், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளில் ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

> கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று புகார்.

> கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு (12 வயதுக்குட்பட்ட 9 மாணவிகளுக்கு) பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நடராஜன்.

> சிவகங்கை, மாவட்டம் காரைக்குடி அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு, முத்து என்ற 72 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மேலும் பல சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

> கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக பேராசிரியர்கள் சதீஸ்குமார், ராஜபாண்டி, முரளிராஜ் மற்றும் லேப் டெக்னீஷியன் அன்பரசு ஆகிய 4 நபர்கள் மீது மாணவிகள் புகார்.

> திருச்சி, மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்திற்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன் டேனியல் (வயது - 31) லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி ஹாஸ்டலில் தங்கியுள்ள விடுதி மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல 6 மாதங்களாகவே, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

> தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் மீது புகார்.

> 17 வயது கல்லூரி மாணவி திருச்சி சூப்பிரண்டு அலுவலகத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அமைச்சர் ஒருவரின் ஓட்டுநர் எனக் கூறி அவரது 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார்.

> சென்னை அண்ணாநகரில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்ததையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்த திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 40 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 - செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.

திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்