திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் கேட்டர்பில்லர் ரூ.500 கோடி முதலீடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களின் விரிவாக்கத்துக்காக, அமெரிக்காவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் துறையை பொருத்தவரை, இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் தமிழகம் கவனம் பெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்துகொண்டு இருப்பதே இதற்கு சான்று.

தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய சராசரியைவிட மிக அதிகமாக இருப்பதும், தமிழகம் திறன்மிக்க பணியாளர்களை பெற்றுள்ளதும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வர முக்கிய காரணமாக அமைந்துள்ளன. மேலும், அதிக முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கும் வகையில், உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களையும் தமிழக அரசு அமைத்து வருகிறது.

வரும் 2030-ம் ஆண்டுக்குள், தமிழகத்தை 1 டிரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய இலக்கை நிர்ணயித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்துக்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க, அரசுமுறை பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். இந்தபயணத்தின்போது, முதல்வர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், உலகஅளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில் புதியதொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 11-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.500 கோடி முதலீட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது உள்ள இந்த நிறுவனத்தின் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

‘பார்ச்சூன் 500’ நிறுவனம்: ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர், உலக அளவில் கட்டுமானம், சுரங்க கருவிகள், ஆஃப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், டீசல் - எலெக்ட்ரிக் இன்ஜின்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இது கட்டுமான தொழில், வளத்தொழில், எரிசக்தி - போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிக பிரிவுகளில் செயல்படுகிறது. டிராக்டர், ஹைட்ராலிக் அகழ்வு கருவி, பேக்ஹோ ஏற்றி, மோட்டார் கிரேடர், ஆஃப்-ஹைவே டிரக், வீல் லோடர், விவசாய டிராக்டர்கள் மற்றும் இன்ஜின்களுக்கான இயந்திரங்களை தயாரித்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் இர்விங் நகரில் இதன் சர்வதேச தலைமை அலுவலகம் உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குநர் புவன் அனந்தகிருஷ்ணன், முதுநிலை துணைத் தலைவர் கெர்க் எப்லர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறைசெயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளை சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். செப்.2-ம் தேதி சிகாகோ சென்று, அங்கும் முதலீட்டாளர்களை சந்தித்தார். இரு இடங்களிலும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் கடந்த 11-ம் தேதி வரை, 17 நிறுவனங்களுடன் ரூ.7,516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு புறப்பட்டு, இன்று துபாய் வருகிறார். நாளை (செப்.14) சென்னை திரும்பும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE