மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து: சென்னை முழுவதும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி 

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மணலி துணை மின்நிலையத்தில் இன்று (செப்.12) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளும் இருளில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகளில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில் நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மின்தடையை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த சில மணிநேரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: “மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. படிப்படியாக மின்சாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. மத்திய சென்னை பகுதியில் மின்விநியோகம் கொடுக்க துவங்கியுள்ளோம். வடசென்னை பகுதியில் அடுத்த 30 நிமிடங்களில் மின் விநியோகம் சீராகும்” என்று தெரிவித்துள்ளார். எனினும் சென்னை முழுவதும் மின்சாரம் சீராக வழங்க 3 முதல் 4 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE