‘சாத்தியம் இல்லாத நிபந்தனைகள்’ - தள்ளிப் போகிறதா விஜய்யின் தவெக மாநாடு?

By செய்திப்பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23-ம் தேதி நடக்கப்போவதாக சொல்லப்பட்டது. குறிப்பாக, விக்கிரவாண்டியில் அதற்கான இடத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் இடத்துக்கான அனுமதி கடிதத்தைத் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால், மாநாடு தொடர்பான சந்தேகங்களைக் கேட்டிருந்தது காவல் துறை. கிட்டத்தட்ட 21 கேள்விகளுக்குப் பதில் கேட்கப்பட்டது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில்தான் காவல் துறை மாநாட்டுக்கு ஒப்புதலும் அளித்திருந்தது.

ஆனால், எல்லாம் கூடிவரும் வேளையில், மிகக் குறுகிய காலத்தில் மாநாட்டை நடத்த முடியுமா என கேள்வி கட்சிக்குள் எழுந்தது. சமீபத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையிலும் கூட இந்த மாதம் மாநாட்டை நடத்தியே ஆக வேண்டும் என தலைவர் விஜய் உறுதியாக சொன்னதாக தெரிகிறது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்துக்கு மாநாடு தள்ளிப் போகலாம் என தகவல் கசிந்துள்ளது.

இது தொடர்பாகக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள், “இன்னும் 11 நாட்கள் தான் இருக்கிறது. இதற்குள் மாநாட்டுக்கான ஏற்பாட்டை முடிப்பது கடினம். அதிலும் காவல் துறை சொல்லும் நிபந்தனைகள் படி வேலைகள் முடிப்பது கொஞ்சம் சாத்தியமில்லாதது. குறிப்பாக, மாநாடு நடக்கும் அந்தப் பகுதியிலேயே வாகனம் நிறுத்த சொல்கிறது காவல் துறை. ஒரே பகுதியில் 55,000 இருக்கைகள், வாகன வசதி என அனைத்து ஏற்பாடு செய்ய முடியாது. மாநாடு தேதி மாற்றத்துக்கு காவல் துறை இந்தக் கட்டுப்பாடு சிக்கலாகக் கூறுகின்றனர். அதனால், மாநாட்டை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கலாமா என்னும் ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

கட்சியின் முதல் மாநாடு என்பதாலும் கட்சியின் கொள்கை விளக்கங்கள் பேசப்பட இருப்பதாலும் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என்னும் அடிப்படையில் இது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி மாநாடு தேதி தள்ளிப் போகும் நிலையில், மீண்டும் மாநாட்டுக்கான ஒப்புதல் கடிதம் காவல்துறையில் சமர்பிக்கப்படும். மாநாட்டுக்கான தேதியை விரைவில் கட்சி தலைமை அறிவிக்கும் என அக்கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE