த.வெள்ளையன் மறைவுக்கு துக்கம்: குமரியில் கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சுற்றுலா மையங்கள்

By எல்.மோகன்

நாகர்கோவில்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உட்பட முக்கிய பகுதிகளில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடைகளை அடைத்து வெள்ளையனுக்கு இரங்கல் தெரிவித்தனர். கடையடைப்பு காரணமாக சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கடல் சங்கம பகுதி மற்றும் சுற்றுலா மையங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கன்னியா குமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித் தங்கம் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளையனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வாகனங்களில் தூத்துக்குடி சென்றனர்.

கன்னியாகுமரியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

இதேபோல், நாகர்கோவில் கோட்டாறு, கருங்கல், குளச்சல், குலசேகரம், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே சமயம் கன்னியாகுமரி தவிர மற்ற இடங்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE