“மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது” - அமைச்சர் பொன்முடி

By சி.பிரதாப்

சென்னை: “மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22 முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் இன்று (செப்.12) நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் டி.ஆபிரகாம் மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சட்டப்பேரவை அறிவிப்புகளின் தற்போதைய நிலை, விரைவுப்படுத்த வேண்டிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியது: “இளநிலை பொறியியல் படிப்புகளில் இந்த ஆண்டு 15,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் உள்ளது. தொடர்ந்து மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கும், கல்வி தரத்தை உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராமப்புற மாணவர்களை தமிழ் புதல்வன் திட்டம் கவர்ந்துள்ளது.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர் விவகாரத்தில் விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்திடமும் அறிக்கை கேட்டுள்ளோம். அவற்றின் அறிக்கைகள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் இந்தி மொழி பாடத்தில் 3 பேர்தான் படிக்கிறார்கள். மலையாளத்தில் 4 பேர் படிக்கிறார்கள். உருது படிப்பில் யாருமே சேரவில்லை. எனவே, இத்தகைய பாடங்கள் தேவையில்லை.

தமிழக மாணவர்கள் இருமொழிக் கொள்கையைத் தான் விரும்புகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்துவது ஏற்க முடியாதது. தமிழகம் பள்ளிக்கல்வியில் இருந்து உயர் கல்வி வரை தலைசிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தாமல் வழங்கி தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE