பேனா நினைவு சின்னம் | ‘விதிமுறைக்கு உட்பட்டுத்தான் எதுவும் நடக்கும்’ - அமைச்சர் சாமிநாதன்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் விதிமுறைக்கு உட்பட்டு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்,” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (செப்.12) காலை கோவில்பட்டியில் உள்ள கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனின் மணிமண்டபத்துக்கு வருகை தந்தார். அவரைக் கோட்டாட்சியர் மகாலட்சுமி வரவேற்றார். மணிமண்டப வளாகத்தில் உள்ள கி.ரா.வின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள டிஜிட்டல் நூலகம், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கி.ரா.வின் புத்தகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர்களுக்கும் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைத்து பெருமை சேர்க்கக்கூடிய அரசு திமுக அரசு. இன்னும் இதுபோன்ற கோரிக்கைகள் வந்துகொண்டுள்ளன. நிதிநிலைமைக்கு ஏற்ப அரங்கம் மற்றும் திருவுருவச் சிலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

செய்தித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிரந்தர பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா அளவில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு உள்ளேன். உரிய நேரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவுகள் எடுக்கப்படும்.

திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஏற்கெனவே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில் மனோதத்துவ மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். புகார் அளிப்பதற்கென தனியாக தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அந்த தொலை பேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக அனுமதி கேட்டுள்ளோம். அதனை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் முடிவாகும். இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் முடிவு இருக்கிறது. பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக எந்த விதிமுறையையும் மீறுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் எடுக்கமாட்டார். விதிமுறைக்கு உட்பட்டுத்தான் எதுவாக இருந்தாலும் நடக்கும்,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில், மாவட்ட உதவி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், நவநீத கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE