மதுரையில் தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் இன்று (செப்.12) அதிகாலையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியைகள் உயிரிழந்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த ஆடைகள் எரிந்து பிற அறைகளுக்கும் தீ பரவியது. மற்ற அறையில்இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். இருப்பினும், இந்த விபத்தில் வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா(22) ஆகியோர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து திடீர் நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்த விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி திடீர்நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கிவந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

உரிய நடவடிக்கை; ஆட்சியர் உறுதி: தீ விபத்து நடந்த மகளிர் விடுதியை மதுரை மாவட்ட ஆசியர் சங்கீதா நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த ஊடகப் பேட்டியில், “இந்த விடுதிக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்ட பல கட்டிட உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தின் நீட்சியாக இதுபோன்ற கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் குறிப்பிட்ட கட்டிடம் சீல் வைக்கப்பட்டு பின்னர் இடிக்கப்படும்” என்றார்,

விபத்து நடந்த விடுதியில் சுமார் 40 பெண்கள் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இருவர் உயிரிழந்த நிலையில் எஞ்சியோர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE