விவசாயி அடையாள அட்டை திட்டம்: மறுஆய்வு செய்து தொடங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாகநேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதற்காக விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறியும் வகையில், அடுத்தமாதம் பதிவு தொடங்கி முடிப்பதற்காக ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்து, பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என்று மத்திய வேளாண் துறை செயலர் தேவேஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.

இனிமேல், இந்த அட்டையை அடிப்படையாக கொண்டுதான் விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு மானியம், சலுகை, கடன்உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு கிடைக்காது. நில உடைமையாளர்கள், குத்தகை பதிவு உரிமை சட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இந்த அட்டை கிடைக்கும்.

கடந்த பல ஆண்டுகளாக குத்தகை பதிவு உரிமை சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் 65 சதவீதத்துக்கு மேல் உள்ள குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப்படாதவர்கள். மேலும், குத்தகை சாகுபடி விவசாயிகளில் பெரும்பாலானோர் தற்காலிக அல்லது ஒருசில ஆண்டுகள் மட்டுமேசாகுபடி செய்பவர்கள். எனவே,பெரும் பகுதியாக உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த அடையாள அட்டை கிடைக்காது.

மத்திய அரசின் ‘பி.எம்.கிசான்’விவசாயிகள் நல நிதிகூட குத்தகைசாகுபடி விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அதுபோலதான், தற்போதைய அடையாளஅட்டை திட்டமும் விவசாயிகள்அனைவருக்கும் பயன்படாது. கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு துரோகமாகவே இது அமையும். எனவே, இத்திட்டத்தை மறு ஆய்வுசெய்து தொடங்க வேண்டும். கிராமங்கள் வரை சென்று திட்டத்தை விளக்கி விவசாயிகளின் கருத்தறிந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE