மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2022-23, 2023-24-ம் நிதியாண்டில் தமிழகத்தின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. மொத்தம் 118.9 கி.மீ. தூரமுள்ள இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ. 63,246 கோடி. இதில் பெரும்பாலான நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

ஜூலை 2024-ல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுமைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ. 21,247 கோடியே 94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டின்படி மகாராஷ்டிராவுக்கு 36 சதவீதமும், குஜராத்துக்கு 15.5 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுக்கு மட்டும் மொத்த நிதியில் 80 சதவீதம் ஒதுக்கியிருப்பது அப்பட்டமான பாரபட்சமாகும். ஒரு ரூபாய் கூட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிதி அளிக்கவில்லை என்பது மத்திய பாஜக அரசின் அப்பட்டமான பாரபட்ச செயலாகும். இத்தகைய பாரபட்ச போக்கை பின்பற்றினால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பாஜக ஆளாக நேரிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE