“விஜய் நடித்த படமும் ஓடவில்லை; அவர் தொடங்கிய கட்சியும் ஓடாது” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்

By பெ.ஜேம்ஸ்குமார்


மாடம்பாக்கம்: “விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பித்த அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் ஓடாது” என அமைச்சர் தாமோ அன்பரசன் விமர்சித்தார்.

தாம்பரம் மாநகரம் கிழக்கு பகுதி திமுக சார்பில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வரும் சனிக்கிழமை (செப்.14) காலை 7 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சென்னை மீனம்பாக்கம் வருகையை முன்னிட்டு வரவேற்பு வழங்குதல், திமுக பவள விழாவையொட்டி வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று கட்சியினர் அனைவரின் வீடுகளில் கழக கொடியேற்றுதல், செப்.17 மாலை 5 மணி அளவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பது, இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்ப்பது போன்றவை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, “இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பித்த அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்பட கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுக தான்.

வட்ட செயலாளர்கள் தினமும் 2 மணி நேரம் கட்சி பணியாற்ற வேண்டும், சரியாக செயல்படாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள், அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கும். அதற்கு இப்போது முதலே அனைவரும் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு தா.மோ.அன்பரசன் பேசினார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் இ. கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து செம்பாக்கம், தாம்பரம் மேற்கு பகுதியில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE