பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணப்பலன் பெற தற்காலிக ஊழியர்கள் தகுதியானவர்கள்: ஐகோர்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: தற்காலிக ஊழியர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணப்பலன் பெற தகுதியானவர்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூனன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட பார்வையற்றோர் சங்கத்தில் 2000-ம் ஆண்டில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தேன். என்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனக்கு பணி நிரந்தரம் வழங்க 2010-ல் உத்தரவிடப்பட்டது. பின்னர் 2011-ல் என்னை பணி நிரந்தரமாக்கினர். எனக்கு நான் பணியில் சேர்ந்த 2000-ம் ஆண்டிலிருந்து உரிய பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெ.சத்தியநாரயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ராமசிவா வாதிடுகையில், “மனுதாரர் வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் பணியில் சேர்ந்தது முதல் உரிய பணப்பலன்களை பெற தகுதியானவர் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் மனுதாரருக்கு சேர வேண்டிய பலன்களை வழங்க உத்தரவி வேண்டும்,” என்றார்.

பின்னர் நீதிபதி, ஏற்கெனவே தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுபவர்கள் பணப்பலன்களை பெற தகுதியானவர்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தற்காலிக ஊழியராக பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணப்பலன்கள் பெற தகுதி பெற்றுள்ளார். எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே மனுதாரருக்கு அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் உரிய பணப்பலன்களை 3 மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE