ஃபாஸ்டேக்-கில் பணமின்றி அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் - பயணிகள் அதிருப்தி

By என்.சன்னாசி

மதுரை: ‘ஃபாஸ்டேக் ’-கில் போதிய இருப்புத் தொகையின்றி அரசு பேருந்துகளை திருப்பி அனுப்பிய மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மீது பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு தூரத்தின் அளவைப் பொறுத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காவல்துறை, அரசு வாகனங்கள் தவிர, அரசு பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு அரசு பேருந்துகளின் முன்பகுதி கண்ணாடியில் சுங்கக் கட்டணத்தை தானியங்கி இயந்திரம் மூலம் எடுக்கும் வகையில் ‘ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ’ ஒட்டப்பட்டு இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதுரையில் இருந்து பயணிகளுடன் நெல்லை, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்ற 5-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ‘ஃபாஸ்டேக் ’-கில் போதிய இருப்புத் தொகையின்றி திருமங்கலம்- கப்பலூர் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டன. அதிகாரிகளிடம் கேட்டு பிறகு செலுத்துகிறோம் என, ஓட்டுநர்கள் கெஞ்சிக் கேட்டும் பயணிகளுடன் பேருந்துகளை திருப்பிவிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் மதுரை டிப்போ பேருந்து ஒன்று பணிமனைக்கு சென்றுவிட்டு பயணிகள் இன்றி சென்றபோதிலும், அந்த பேருந்தும் சுங்கச்சாவடியை கடக்க முடியவில்லை. இச்சம்பவம் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசுபேருந்துகளை நம்பி பயணிக்க முடியாதா என, பயணிகள் புலம்பினர்.

இது குறித்து சுங்கச் சாவடி நிர்வாக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “பொதுவாக அரசு பேருந்துகளுக்கான ஃபாஸ்டேக்-கில் சில நேரம் ரீசாஜ் செய்யாமல் விட்டுவிடுவது வழக்கம்தான். இருப்பினும், அதற்காக பயணிகளுடன் செல்லும் அரசு பேருந்துகளை சுங்கச் சாவடிகளில் நிறுத்தக் கூடாது. அப்படியே கட்டணம் செலுத்தாமல் செல்லும் பேருந்துகளின் பதிவெண், நேரம் ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக டிப்போ நிர்வாகத்திடம் உரிய சுங்கக் கட்டணத்தை வசூலிக்கவேண்டும். இதுவே நடைமுறையில் உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகள் திருப்பி அனுப்பியது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE