“மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தருவோம்” - அன்புமணி ராமதாஸ்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: “மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பரமத்தி வேலூரில் இன்று (செப்.11) நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். தொடர்ந்து நாமக்கல் வந்த அன்புமணி ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் கூறியது: “நாமக்கல் மாவட்டம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. ஆனால் இங்கு நிலத்தடி நீர் 1,300 அடிக்கு கீழே சென்றுள்ளது. வசதியானவர்கள் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. சமீபத்தில் காவிரி ஆற்றில் இருந்து 45 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது. அதில் ஒரே நாளில் 17 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. காவிரி ஆற்றில் 10 கி.மீ.,க்கு தடுப்பணை கட்ட வேண்டும்.

தமிழகத்தில் மது, போதைப்பொருட்களால் இளைஞர்கள் அழியும் நிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் 8 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு டிஜிபி சொல்லும் காரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதற்கு முன் 150 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மதுவும், போதைப் பொருட்களும் தான். பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா கிடைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. இதைப்பற்றி முதல்வருக்கு அக்கறையோ, கவலையோ கிடையாது.

மதுவைக் கொடுத்து 3 தலைமுறைகளை அழித்துவிட்டார்கள். தமிழகம் தான் போதைப்பொருள் விற்பனை மையம் என விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிஹார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழக முதல்வர் எங்களுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்கிறார். சமூக நிதி பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்றப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் மாநில அரசுகளுக்கு சில பாதகமான அம்சங்கள் உள்ளன. மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு மீது திணக்கக் கூடாது. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாவிட்டால் நிதி கொடுக்க மாட்டோம் என கூறுவது தவறானது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். எமர்ஜன்சியைப் பற்றி தொடர்ந்து பேசும் பாஜக அது தவறு என கூறுகின்றனர். அப்படி என்றால் அந்தக் காலக்கட்டத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றதும் தவறுதான். அந்த தவறை பாஜக சரிசெய்ய வேண்டும்,” என்றார்.

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களுக்கு யாரும் அழைப்பும் விடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக பாமக மது ஒழிப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகள் மது விலக்கு கொள்கையை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டதற்கு பாமக தான் காரணம்.தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் திமுகவும், அதிமுகவும் தான்.

திராவிட மாடல் என்றால் தமிழகத்தில் மது இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான். 3 தலைமுறைகளை மதுவைக் கொடுத்து ஒழித்துவிட்டார்கள். 4-வது தலைமுறையை ஒழிக்க பார்க்கிறார்கள். உழைக்கும் மக்கள் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். தமிழக அரசு மதுவை விற்கவில்லை. மதுவை திணிக்கின்றனர். திமுகவைச் சேர்ந்த இரு எம்பிகள் கம்பெனியில் இருந்து தான் 40 சதவீத மதுபானம் டாஸ்மாக்குக்கு சப்ளை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதலீடு குறைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்தியளவில் தமிழகம் முதலீடு அளவில் 4-வது இடத்தில் இருந்தது. தற்போது 6-வது இடத்துக்கு வந்துள்ளது. முதலீட்டை ஈர்ப்பதாக கூறி முதல்வர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் என்பது ஏமாற்று வேலை,” என்றார்.

மீண்டும் மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்வி எழுப்பியபோது, “மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம்” என்றார். நடிகர் விஜய்யின் தவெக மாநாடு குறித்த கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வாழ்த்துகள், என்றார்.

மேலும், “பாஜக கூட்டணியில் பாமக தொடர்கிறது. மோகனூர் வளையப்பட்டியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தும் போராட்டத்துக்கு பாமக ஆதரவு தருகிறது. திட்டத்தை கைவிட வேண்டாம். வேறு இடத்தில் திட்டத்தை செயல்படுத்துங்கள்,” என்று அவர் கூறினார். இந்தச் சந்திப்பின் போது, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ரா.அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விசிக நிலைப்பாடு என்ன? - “உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் பங்கேற்கலாம். பாமக மற்றும் பாஜகவுக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். “அந்த இரு கட்சிகளும் மதவாத, சாதியவாத கட்சிகள் என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். | வாசிக்க > “பாமக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை” - திருமாவளவன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்