“திமுகவினர் வன்முறையில் ஈடுபட முயற்சி; அறவழியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை” - கே.பி.முனுசாமி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ராமன் தொட்டி கேட் பகுதியில் புதிய திட்டப் பணிகளை அதிமுக எம் எல்ஏ-வான கே.பி.முனுசாமி தொடங்கிவைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக எம்எல்ஏ-க்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் கே.பி.முனுசாமி.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ''ஜனநாயக அரசியலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் அரசு நிர்வாகம் உறுதுணையாக இருக்க வேண்டும். வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை கடந்த 3 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறேன்.

அதன்படி இன்று கும்மளம் ஊராட்சியில் சாலை திட்டத்தை தொடங்கி வைக்க வந்த பொழுது (திமுக) மாற்றுக் கட்சியினர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்தார்கள். ஆனால், அதிமுக தலைமை எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபடாமல் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்தார். நானும் 4 மணி நேரம் அறவழியில் போராட்டத்தை தொடர்ந்தேன். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் தொடர் முயற்சி மேற்கொண்டு நல்ல தீர்வை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் அரசு அலுவலர்கள் சரியாக இருக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை பட்டுப் போகச் செய்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அரசு அலுவலர்கள் நல்ல முயற்சி மேற்கொண்டு உரிய தீர்வை ஏற்படுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் 4 மணி நேரம் கடும் முயற்சி எடுத்து தான் நான் இந்த பூமி பூஜையை செய்வதற்கு தீர்வை பெற்றுத் தந்தனர்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும் என்பதை மறந்து ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார்கள். மீண்டும் மக்களை சந்திக்க வேண்டும் மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மறந்துவிட்டு அவர்கள் இதுபோல் செயல்படுகின்றனர். எதிர்வரும் தேர்தலில் இதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, திமுகவினரும் இதே திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்தனர். பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் அதிமுக, திமுக கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE