வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தகர தடுப்பு அமைக்கும் பணி - ஐகோர்ட் உத்தரவுப்படி கடலூரில் தொடக்கம்

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகர தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ரூ.99 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும், வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான 106 ஏக்கரில் 71.20 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது உள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ் வேங்கை, கடலூர் திருப்பாதிரிப் புலியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தெய்வ நிலையத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். அரசின் அனைத்துத் துறைகளிலும் அனுமதி பெற்று சர்வதேச மையம் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. மேலும், இரண்டு கட்டமாக வள்ளலார் சத்திய ஞான சபை அருகில் அமைந்துள்ள 10 ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி, பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு வீடு, கடைகளையும் இடித்து அப்புறப் படுத்தினர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வடலூர் வள்ளலாருக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலங்களை தவிர்த்து திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்திற்குச் சொந்தமான மீதமுள்ள நிலங்களை கண்டறியவும், அந்நிலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை அகற்றிட நில அளவையர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்திடவும், அதில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினரை ஈடுப்படுத்திடவும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

மேலும் இப்பணியினை ஒருங்கிணைத்து ஒரு மாத காலத்திற்குள் விரைவாக முடிவு செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக செப்டம்பர் 12ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் 34 ஏக்கர் நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளது என்ற விவரத்தையும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிறுவர்கள், குழந்தைகள் பாதுகாப்புக் கருதி பெருவெளிக்குள் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளங்களை சுற்றி உடனடியாக வேலி அமைக்க நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப் பாடி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் 5 குழுக்களாகப் பிரிந்து அந்த 34 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கட்டிடங்களில் ஆய்வு செய்தனர். இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் 34 ஏக்கர் நில எல்லைக்குள் அமைந்துள்ள நிலையில் இந்த கட்டிடங்கள் எப்பொழுது வாங்கப்பட்டது, தற்பொழுது யார் பெயரில் உள்ளது என அந்த கட்டிடங்களில் உள்ளவர்களிடம் கேள்வி எழுப்பி கணக்கெடுப்பு நடத்தினர். மேலும், இந்த 34 ஏக்கருக்கும் வில்லங்கச் சான்றிதழை எடுக்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று (செப்.11) காலை முதல் சிறுவர்கள், குழந்தைகள் நலன் கருதி சத்திய ஞான சபையின் பெருவெளியில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி தகர ஷீட்டால் தடுப்பு அமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE