நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்? - உளவுத் துறை விசாரணை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முழுமையாக விசாரணை நடத்தி தகவல் தெரிவிக்குமாறு உளவுத் துறையினருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு தற்காலிகமாக பணிபுரியும் ஓர் ஆசிரியரும், மற்றொரு ஆசிரியரும் சேர்ந்து மாணவர்கள் சிலரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து அந்த மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், இதனால் பெற்றோர்கள் பள்ளியில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியரை டிஸ்மிஸ் செய்துள்ள பள்ளி நிர்வாகம், மற்றொரு ஆசிரியரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. மாணவர்களின் எதிர்காலம் கருதி புகார் அளிக்க விரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மாணவர்கள் மீது ஆசிரியர்களே பாலியல் வன்முறை நடத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளதால் அதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக தீவிர விசாரணை நடத்தி தகவல் தெரிவிக்குமாறு உளவுத் துறையினருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE