தண்டனைக் கைதி துன்புறுத்தப்பட்ட வழக்கு: வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி எஸ்.பி நேரில் விசாரணை

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி-யான ராஜலட்சுமியின் வீட்டில் ரூ.4.25 லட்சம் பணம் திருடிய புகாரில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 95 நாட்கள் தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக தற்போது வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி எஸ்பி-யான வினோத் சாந்தாராம் விசாரணை நடத்தி வருகிறார்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி-யான ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் டிஐஜி வீட்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.4.25 லட்சம் பணத்தை திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை தனிச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, புகார் தொடர்பாக வேலூர் தலைமை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி, நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில், வேலூர் சிறையில் இருந்து தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், வேலூர் சிபிசிஐடி போலீஸார் பி.என்.எஸ் 115(2), 118(2), 146, 49, 127(8) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி-யான ராஜலட்சுமி, மத்திய சிறை (பொறுப்பு) கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி-யின் மெய்க்காவலர் ராஜூ, சிறப்புப் படை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதில், தண்டனை கைதி சிவக்குமார் உள்ளிட்ட சிலர் சிறைச்சாலை பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் பணி, காற்று நிரப்பும் பணி, செடிகள் பராமரிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 1983-ம் ஆண்டு சிறைச்சாலை விதிகள் 447-ன் படி சிறைவாசிகள் சிறைக்கு வெளியே பணியமர்த்த சிறைத்துறை தலைவரின் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், சிவக்குமார் உள்ளிட்டோரை வெளியில் பணியில் அமர்த்தியதற்கான அனுமதி எதுவும் இல்லை. மேலும், சிறைச்சாலை விதிகளை மீறி டிஐஜி வீட்டில் சிவக்குமார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

சிறைத்துறை டிஐஜி வீட்டில் இருந்து ரூ.4.25 லட்சம் பணம் திருடுபோனதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார்.

தண்டனை கைதி சிவக்குமார், எச்.எஸ்-4 தொகுதியில் 81 நாட்கள் தனிச்சிறையிலும் மூடிய தனிச்சிறையில் 14 நாட்களும் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வேலூர் சிபிசிஐடி ஆய்வாளர் இந்திரா வழக்குப்பதிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி-1 எஸ்பி-யான வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சேலம் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம் நேற்று (செப்.10) நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, சிவக்குமார் கூறிய தகவல்களை வீடியோவில் சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி எஸ்பி-யான வினோத் சாந்தாராம் இன்று (செப்.11) காலை 11 மணி முதல் விசாரணை நடத்தி வருகிறார். சிறைக்குள் சிவக்குமாரை அடைத்து வைத்திருந்த அறைகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE