தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நாளை அடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடல், தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவைத் தலைவர் த.வெள்ளையன்(76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 3-ம் தேதி அவரதுஉடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்குச்சென்றது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் த.வெள்ளையன் காலமானார்.

அதைத் தொடர்ந்து அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகேஉள்ள இல்லத்திலும் பெரம்பூர் வியாபாரிகள் சங்க கட்டிடத்திலும்வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் சென்னையில் இருந்து அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, நாளை பகல் 4 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

த.வெள்ளையனுக்கு தங்கம் அம்மாள் என்ற மனைவியும், டைமன் ராஜா, தீபன் தினகரன், மெஸ்மெர் காந்தன் ஆகிய மகன்களும், அனு பாரதி, அர்ச்சனா தேவி ஆகிய மகள்களும் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மற்றும் சென்னை புறநகர் என்று இருந்த வணிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்தார். தனது கடின உழைப்பாலும், தமிழகம்முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வணிகர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை உருவாக்கினார்.

வணிகர்கள் பிரச்சினைகள் மட்டுமின்றி விவசாயிகள், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டார். குறிப்பாக, காவிரி,இலங்கை, மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, பலமுறை கைது செய்யப்பட்டு சென்னை சென்ட்ரல், புழல், வேலூர் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்.

முதல்வர், தலைவர்கள் இரங்கல்: த.வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும்வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழக வணிகர்களின் நலனுக்காக பல்லாண்டுகள் அல்லும்,பகலும் பாடுபட்டவர் த.வெள்ளையன். அவர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரதுகுடும்பத்துக்கும், வணிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: வணிகர்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி,பல கோரிக்கைகளை வென்றெடுத்தவர். அவரது மறைவு வணிகர் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE