ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை புகார்: சிறை டிஐஜி உட்பட 14 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரையடுத்து, சிறைத் துறை டிஐஜி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர், வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், டிஐஜி வீட்டில் இருந்து அவர் ரூ.4.25 லட்சத்தை திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை தனி சிறையில் அடைத்து, சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியார் விசாரணை நடத்தினர். மேலும், வேலூர் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், வேலூர் சிறையில் நேரில் விசாரணை நடத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில், வேலூர்சிறையில் இருந்த சிவக்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும், வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் மெய்க்காவலர் ராஜு, சிறப்புபடைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி,செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது வேலூர் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவக்குமார் உள்ளிட்ட சிறைவாசிகள் சிலரை சிறைச்சாலை பெட்ரோல் நிலையத்தில் பணியில் அமர்த்தியுள்ளனர். சிறைச்சாலை விதிகள்படி, சிறைவாசிகளை சிறைக்கு வெளியே பணியில் அமர்த்த சிறை துறைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும். ஆனால், உரிய அனுமதி பெறாமல்,சிறைக்கு வெளியில் பணியில் அமர்த்தியள்ளனர். மேலும், விதிகளை மீறி டிஐஜி வீட்டில் சிவக்குமார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

டிஐஜி வீட்டில் ரூ.4.25 லட்சம் திருடுபோனது தொடர்பாக காவல்நிலையத்தில் புகர் அளிக்கவில்லை என்பதால், இதுகுறித்து விரிவானவிசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், கைதி சிவக்குமார் தனிச் சிறையில் 81 நாட்களும், மூடிய தனிச் சிறையில் 14 நாட்களும் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வேலூர்சிபிசிஐடி காவல் ஆய்வாளர் இந்திரா முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார். இதன்ஒரு பகுதியாக, சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாரிடம் நேற்று நேரில் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சிவக்குமார் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தனி சிறையை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE