திண்டுக்கல்: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வரின் முயற்சியால் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட்டில் ஜாபில் எனும் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் பெண்கள் உட்பட 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் திருச்சி மட்டுமின்றி திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் பயனடைவர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. தேசிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை உள்ளே கொண்டு வருவதற்கு நினைக்கிறது. கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு சர்ச்சை: பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களிடம் அறிவு சார்ந்த விஷயங்களை கொண்டு செல்லும்போது, பேச்சாளர் மகாவிஷ்ணு போன்றவர்கள் மாணவர்களிடம் மூடநம்பிக்கைகளை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வியில் மதம் கலக்கக் கூடாது. பள்ளி நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இரண்டு நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.
» உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்: சிவகாசி மாநகர திமுக தீர்மானம்
» “அரசுத் திட்டங்களில் குறைபாடுகளை ஏற்க முடியாது” - அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் உதயநிதி
தமிழக அரசு Vs மத்திய அரசு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அறிவும் அடங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா? அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago