தமிழகக் கோயிலில் இருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.5 கோடி கிருஷ்ணர் சிலை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தமிழக கோயிலில் இருந்து திருடி விற்கப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் சோழர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கலியுக கல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ளது) ஐம்பொன் சிலையானது சிலைக் கடத்தல் கும்பலால் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது. அந்தச் சிலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பிடம் இருப்பதைத் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த சிலையைச் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஸ் சந்திர கபூரிடம் இருந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச் ஃபோர்டு என்பவர் ரூ.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். சிலையை வாங்கிய டக்ளஸ் 2020-ல் இறந்துவிட்டார். இந்தத் தகவல்கள் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, இந்த சிலையை மீட்கும் முயற்சியில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யான தினகரன் தலைமையிலான போலீஸார், மத்திய வெளிவுறவுத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக இன்டர்போல் உதவியும் நாடப்பட்டது.

இந்த முயற்சிகளை அடுத்து, தங்கள் வசம் இருந்த கிருஷ்ணர் சிலையை தாய்லாந்து நாட்டின் பாங்காக் அரசு நிர்வாகத்திடம் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு அதிகாரிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி ஒப்படைத்தனர். அதன் பின்னர் இந்த சிலை தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட கிருஷ்ணர் சிலை தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்துக்குச் சொந்தமான அந்தச் சிலை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி-யான பாலமுருகன் தலைமையிலான போலீஸார், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து அந்தச் சிலையானது கும்பகோணம், நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடத்தப்பட்ட இந்தச் சிலையானது தமிழகத்தின் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது, அங்கிருந்து அந்தச் சிலை யாரால் எப்படிக் கடத்தப்பட்டது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE