அமைச்சர் நிகழ்ச்சிக்காக தூய்மைப் பணியில் மாணவர்கள்: டிடிவி தினகரன் கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: சிவசங்கையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாணவர்களை மைதானம் சுத்தம் செய்யப் பணித்தது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது: சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் விடுதி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த மாணவர்களை உரிய பயிற்சியை மேற்கொள்ள விடாமல், அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும், விளையாட்டுக் கம்பம் தூக்கும் பணியிலும் ஈடுபடுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களை வேறு எந்த பணிகளுக்காகவும் ஈடுபடுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை, விளையாட்டுத்துறை அமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு அதிகாரிகளே மீறியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விடுதி மாணவர்களை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத அளவிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE