ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20% அதிகரிக்க திட்டம்

By எம். வேல்சங்கர்

சென்னை: நிகழாண்டில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில், நெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி சுமார் 34 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீல, ஊதா நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர, பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 200-க்கும் மேற்பட்ட பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், நிகழாண்டில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் கூறியதாவது: ஆவின் நிறுவனம் சார்பில், வெண்ணெய், நெய், பால்கோவா, லஸ்சி, மோர், தயிர் மற்றும் ஜஸ் கிரீம் போன்ற பால் பொருள்களை தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பண்டிகை காலத்தில் இனிப்புவகைகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் உள்பட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் நெய் 100 டன் அதிகமாக விற்க திட்டமிட்டப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த இனிப்பு வகைகளை, ஆவின் மூலமாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்று விற்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE