தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி அக்.4-ல் கடையடைப்பு போராட்டம்: பாமக அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாட்டின் அடிப்படை வாழ்வாதாரம் வேளாண்மை தான். ஆனால், வேளாண்மைக்கே வழியின்றி, மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டம் என்றால் அது தருமபுரி மாவட்டம் தான். தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்யும் மாநிலமாக மாற்றும் காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாகத் தான் நுழைகிறது. ஆனால், தருமபுரி மாவட்ட பாசனத் தேவைக்கு காவிரி ஆற்றால் எந்த பயனும் இல்லை.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52% நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48% நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.

தருமபுரி - காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டி.எம்.சி மட்டுமே நீர் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி, 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும்.

தருமபுரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக 2014-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்தத் திட்டத்தை நான் தயாரித்தேன். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி 19.09.2018 அன்று தருமபுரியில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த நான், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அவற்றை 05.03.2019 இல் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வழங்கினேன். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் இத்திட்டம் குறித்து பலமுறை வலியுறுத்தினேன்.

ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19&ஆம் தேதி ஒகேனக்கலில் தொடங்கி பாப்பிரெட்டிபட்டி வரை 3 நாட்கள் எனது தலைமையில் மிகப்பெரிய எழுச்சிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு திசம்பர் 18-ஆம் தேதி எனது தலைமையில் பா.ம.க. மாபெரும் போராட்டத்தை நடத்தியது. ஆனால், பல நூறு கோடியை வீணாக செலவழிக்கும் திமுக, ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி & காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது.

தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது. தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து, தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கோருகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்