வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்வழி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்தியது மாநகராட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகருக்கு அதிகமழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. எனவே,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 30-க்கும் மேற்பட்ட நீர் வழிக்கால்வாய்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் ஆகாயத் தாமரைகள், மிதக்கும் கழிவுகள் மற்றும் வண்டலை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே 4 ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் உள்ளன.

மேலும், கூடுதலாக 2 இயந்திரங்கள் ரூ.22.80 கோடியில் வாங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியிடம் ஏற்கெனவே 2 ஆம்பிபியன் வாகனங்கள், 3 மினி ஆம்பிபியன் இயந்திரங்கள், மறுசுழற்சி வசதியுடன் கூடிய அதிகத்திறன் கொண்ட 7 நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மேற்கூறிய இயந்திரங்களைக் கொண்டு கோட்டூர்புரம் அருகிலுள்ள அடையாறு ஆறு, ராயபுரம் மண்டலத்தில் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி குளம், மணலி ஏரி, திருவிக நகர் மண்டலத்தில் ராஜீவ் காந்தி நகர் அருகிலுள்ள ஏகாங்கிபுரம் கால்வாய், நொளம்பூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ரெட்டி குப்பம் கால்வாய், பாடிகால்வாய், சின்னசேக்காடு ஜாகிர் உசேன் கால்வாய் ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், குஜராத்திலிருந்து வாடகைக்கு வரவழைக்கப்பட்ட ட்ரெய்ன்மாஸ்டர் இயந்திரம் மூலம் கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE