விஜய் கட்சி மாநாடு வெற்றி பெற தேமுதிக சார்பில் வாழ்த்துகள்: விஜயபிரபாகரன்

By ஆர்.டி.சிவசங்கர்


நீலகிரி: “நடிகர் விஜய் மாநாடு நடத்திய பின்னரே கருத்துக் கூற முடியும். அவருக்கு வாழ்த்துக்கள்” என நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உதகையில் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் தேமுதிக சார்பில் நடக்கும் முப்பெரும் விழாவில் பங்கேற்க தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று உதகைக்கு வந்திருந்தார். நடிகராக இருந்த தன்னுடைய தந்தை நடித்த சூட்டிங் மட்டம், கிளன்மார்கன் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். உதகை பேருந்து நிலையம் பகுதியில் தேமுதிக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து உதகை காந்தல் பென்னட் மார்க்கெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேமுதிக கட்சியின் 20வது ஆண்டு தொடக்க விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ஊட்டி என்பது என் தந்தை அடிக்கடி சினிமா படப்பிடிப்புக்காக வந்து சென்ற இடம்.

ஊட்டிக்கும் என் தந்தைக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. அவர் படப்பிடிப்பு நடந்த இடங்களுக்கு சென்று நான் பார்வையிட்டேன். அப்போது, அங்கிருந்த மக்கள் நடிகர் விஜயகாந்த் இங்கே வரும்போது, எங்கள் கடையில் சாப்பிடுவார். அதை எங்களால் மறக்க முடியவில்லை என்று கூறியது என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது. தேமுதிக கட்சிக்கு மக்களிடத்தில் வரவேற்பு உள்ளது. கட்சியிலிருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், கட்சி பலம் பெறும்.கடந்த 2005ம் ஆண்டு மதுரையில் நடந்த தேமுதிகவின் மாநாடு வரலாறு படைத்தது. அரசியலில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த மாநாட்டில் சுமார் 35 லட்சம் கலந்து கொண்டனர். சுமார் 1300 கிலோமீட்டர் தூரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விஜய் கட்சி மாநாடு நடந்து முடிந்த பின்னரே கருத்துக்கூற முடியும். விஜய் அண்ணன் மாநாடு வெற்றி பெற என் சார்பாகவும் தேமுதிக சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE