பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருது: திமுக பவள விழாவை முன்னிட்டு அறிவிப்பு

By கி.கணேஷ்

சென்னை: திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு, தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது முதல் முறையாக அறிவிக்கபட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கட்சியைக் காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தை காட்டும் செயலை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 1985-ம் ஆண்டு முதல் தொடங்கி வைத்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி பெயரிலான விருதுகள் திமுக காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 2008 முதல் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் விருதும், 2018 முதல் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

திமுக தனது 75-வது பவள விழாவைக் கொண்டாடும் காலத்தில், திமுகவை 6 வது முறையாக ஆட்சியில் அமர வைத்து, இந்தியாவே போற்றும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் திமுக தலைமைக்கழகம் பெருமையடைகிறது. இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது, தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE