“மகாவிஷ்ணு சொற்பொழிவு போல வேறு பள்ளிகளில் நடந்துள்ளதா?” -  ஆய்வுக்கு முத்தரசன் கோரிக்கை

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: “சென்னை அரசு பள்ளியில், அறிவியலுக்கு முரணாக மகாவிஷ்ணு கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்திய சொற்பொழிவு போன்று வேறு எந்த பள்ளியிலும் நடைபெற்றுள்ளதா என்பதை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று (செப்.9) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பிற்போக்குத்தனமான தேசிய கல்விக் கொள்கையை பாடத் திட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. அதனை ஏற்றுக் கொண்டால்தான் நிதி ஒதுக்கீடுகள் செய்வோம் என மாநில அரசை நேரடியாக நிர்பந்திப்பதோடு, ஆளுநர் மூலமாகவும் தேசிய கல்விக் கொள்கையே உயர்ந்தது எனச் சொல்லி, அபத்தமான கருத்துக்களை தெரிவித்து நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவு ஆற்றியுள்ளார் . ஒரு சொற்பொழிவாளர் அரசு கல்வி நிலையங்களில் அனுமதி இன்றி சொற்பொழிவு ஆற்றுவது என்பது இயலாது. மிக மோசமான சொற்பொழிவு நடைபெற்றிருக்கிறது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டுள்ளார்.

அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றாலும் கூட, அரசு பள்ளிகளில் இப்படி பிற்போக்குத்தனமான, அறிவியலுக்கு புறம்பான மூட பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒரு தனிப்பட்ட நபர் சொற்பொழிவு ஆற்றுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்கிற கேள்வி எழுகிறது. இது போன்ற சொற்பொழிவு இந்த பள்ளியில் மட்டும் தான் நடைபெற்றுள்ளதா? வேறு எந்த பள்ளியிலாவது நடைபெற்றுள்ளதா? என்ற கேள்விகள் எழுகிறது. எனவே, இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ந்து, கல்வியை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையிலிருந்து காரைக்குடி வரை ஏற்கெனவே இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டத்தை கவரவிக்க கூடிய வகையில் வேதாரண்யத்தில் இருந்து தண்டி வரையில் ஒரு தனி ரயில் இயக்குவதற்கும், ரயிலுக்கு உப்பு சத்தியாக போராட்ட நினைவு ரயில் என பெயர் சூட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். அவருடைய உயிருக்கும், உடைமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தற்பொழுது கூட இலங்கை சிறைகளில் மீனவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. செலுத்தவில்லை என்றால் ஆறு மாத கடுங்காவல் தண்டனை என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர்கள் பாதிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பிரதமருக்கு உண்மையிலேயே கச்சத் தீவு குறித்து அக்கறை இருக்குமேயானால் அதைத் திரும்ப மீட்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி, இல்லாமல் போய்விட்டது. டெல்டா மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சம்பா சாகுபடி மட்டும் தான் நடைபெற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் விதை கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று விவசாயிகள் பரவலாக குறிப்பிடுகிறார்கள்.

விதைகளுக்கு ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு உடனடியாக தலையிட்டு கூட்டுறவு அமைப்புகளின் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவுக்கு விதைகள் கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE