பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி - விதிகள் விவரம்

By கி.கணேஷ்

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5476 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இறங்கியுள்ளன. இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள், தங்களின் குடியிருப்புகள், விளைநிலம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை காரணம் காட்டி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதியளித்துள்ளது. இதற்கான அரசாணையில், இந்த திட்டத்துக்காக 5746.18 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3774.01 ஏக்கர் மற்றும் அரசு நிலம் 1972.17 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல் படி, ரூ.1822.45கோடி இழப்பீடும் நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது பரந்தூர் விமான நிலையத்துக்கான நில எடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில், சுற்றுச்சூழல் அனுமதி கோரி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

அதன் விவரம் > சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையுடன், விமான நிலையம் அமையும் இடத்தில் தொல்லியல் சார்ந்த பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்துவதுடன், இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.

> பாதிக்கப்படும் குடும்பங்களை இடம் மாற்றுவது தொடர்பான சமூக தாக்க ஆய்வு மற்றும் துயர் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீரியல் சார்ந்த ஆய்வு செய்யப்பட வேண்டும். மரம் வெட்டுதல், நடுதல், பசுமையாக்குதல் போன்றவை தொடர்பாக மாநில வனத்துறையின் ஆலோசனையுடன் விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும்.

> திட்டத்தால் பாதிக்கப்படும் சதுப்பு நிலம் தொடர்பான விரிவான ஆய்வு நடத்தி, மாநில அரசின் சதுப்பு நிலம் தொடர்பான ஆணையம் அல்லது இதர துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.

> சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின் ஒரு பகுதியாக, தாக்க பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும்.

> பறவைகள் வலசைப்பாதையில் ஏற்படும் பாதிப்பு, திட்டப்பகுதியின் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

> மின் உற்பத்திக்காக இயற்கை எரிவாயு பயன்படுத்துவது தொடர்பாகவும், திட்டத்தால் ஏற்படும் முக்கியமான நன்மைகள் குறித்தும் அறிக்கையில் இடம் பெறுதல் வேண்டும்.

> விமான ஓடுபாதை, முனைய கட்டிடம், வாகன நிறுத்துமிடம், பசுமை பகுதி உள்ளிட்டவை குறித்த வரைபடம் இணைக்கப்பட வேண்டும்.

> அகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அகழ்ந்து எடுக்கப்படும் பொருட்களை வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கான மேலாண்மை திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

> விரிவான போக்குவரத்து மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டு, மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெற்று இணைக்கப்பட வேண்டும்.

> அபாயங்கள் மற்றும் விபத்துகள் தொடர்பான பேரிடர் மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

> குளிர்சாதன அமைப்புகள், உள்புற விளக்கு அமைப்புகள், தண்ணீர் மற்றும் காற்று வெப்பமாக்கும் கருவிகள் உள்ளிட்டவை கார்பன் குறைப்பை ஊக்குவிப்பவையாக இருக்க வேண்டும்.

> தேவைப்படும் தண்ணீர், மின்சாரம் விநியோகத்துக்கான வளம், அதற்கான ஒப்புதல், தேவையான பணியாளர்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

> திட்ட முடிவின்போது திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை இடம் பெற்றிருக்க வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE