குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜர்!

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.

தமிழகத்தில் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் லஞ்சம் கொடுத்து தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்டது தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக குட்கா குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு இந்த வழக்கில் அதிமுக முன்னா்ள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா என்ற பி. வெங்கடரமணா, ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், சுகாதாரத் துறை அதிகாரிகளான டாக்டர். லட்சுமி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர். மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு, கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்.9) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 19-வது நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.முருகன் இறந்து விட்டதாகக்கூறி இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ். ஜார்ஜ் உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பாக நேரில் ஆஜராகினர்.

அப்போது சிபிஐ தரப்பில், குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் செப்.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE