சாம்சங் நிறுவனத் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்பட்டு வரும் சம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை பிரச்சினையில் தலையிட்டு, அதன் தொழிலாளர்கள் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சிஐடியுவின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சம்சங் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் ஒரு தொழிற்சாலை நடத்துகிறது. இது செயலுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகின்றன. இதில் 1700 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதில் 60 பேர் பெண்கள், இந்தத் தொழிலாளர்களின் ஊதியம், இவர்களுக்கு உதிரிபாகம் உற்பத்தி செய்து தருகிற சில தொழிற்சாலைத் தொழிலாளர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளது. அக்கம் பக்கத்தோடு ஒப்பிடும்போது இவர்களின் இதர சலுகைகளும் குறைவானதாகவே உள்ளன.

16 ஆண்டுகளாக இந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்ட சங்கம் இல்லாமலே இருந்துள்ளனர். ஆனால் நிர்வாகத்தின் அணுகுமுறைகளும், பிசினாரித்தனமும், அடாவடி நடவடிக்கைகளும் பணிச்சுமை திணிப்புகளும் தொழிலாளர்களை சங்கம் அமைக்க தூண்டியுள்ளது. அவர்கள் சிஐடியுவை அணுகினார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சங்கம் ஆரம்பித்து பதிவிற்காக விண்ணப்பித்ததிலிருந்து நிர்வாகம் பலவிதமான அடக்குமுறைகளையும், கெடுபிடிகளையும் செய்து மிரட்டியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பணிநீக்கம் செய்வோம் என்று மிரட்டுவது, நிறுவனத்திற்குள் இடமாற்றங்கள் செய்வது, லீவுமறுப்பது போன்ற பலவற்றோடு கடுமையான தனித் தனியான மிரட்டல்களில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வன்முறை ஏவப்படும் என்பதை பல முறைகளில் நேரில் கூறி மிரட்டியுள்ளனர். தொழிற்சங்க பதிவு கிடைக்காது என்றும் அதற்கான வேலைகளைச் செய்து விட்டோம் என்றும் நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர் துறையின் நேர்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சில தொழிலாளர்களை அறையில் மங்கலான வெளிச்சத்தில் தனித்தனியாக நாள் முழுவதும் அடைத்து வைத்துள்ளனர். இந்த தனிமைச்சிறை மிக மோசமான மனித உரிமை மீறலும், சித்திரவதையுமாகும்.

வேறு அமைப்பு அமைப்பதற்கான படிவத்தை நிர்வாகமே தயார் செய்து தொழிலாளர்களை கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தி வருகிறது. வேறு அமைப்பிற்கு ஆதரவு தருவோருக்கு குளிர்சாதனப் பெட்டி தரப்படும், தொலைக்காட்சிப் பெட்டி தரப்படும், பணம் தரப்படும் என்பது போன்ற ஆசை வார்த்தைகள் கூறப்படுகிறது. ஒரு தொழிற் சங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது தொழிற்தகராறு சட்டப்படி கடுமையான குற்றம். துணைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடந்த சமரசப் பேச்சு வார்த்தையிலும் நிர்வாகம் சட்டத்தை மதிக்காமலும், வன்மத்தோடு நடந்து கொள்கிறது. வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் இறுதி ஆயுதமான வேலை நிறுத்தத்தில் 9.9.2024 அன்றிலிருந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் முக்கியமானதும் முதன்மையானதுமான கோரிக்கை சங்கம் அமைக்கும் உரிமையும், கூட்டுபேர உரிமையுமாகும். இந்தக் கோரிக்கையில் சமரசம் செய்வதற்கான இடமே இல்லை. இது சட்ட உரிமை. இதை நிலைநாட்டி தொழிலாளர்களுக்கு உரியதாக்குகிற கடமை அரசினுடையது. இதை ஏற்று பழிவாங்கல்களை ரத்து செய்து, சங்கம் அமைப்பதற்கு முன்பிருந்த நிலையைத் தொடரவேண்டும். கோரிக்கைகளைத் தொடர்ந்து பேச வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தின் கோரிக்கை இதில் தலையிட வேண்டிய தொழிலாளர் துறை வேகமாக தலையிட வேண்டும் என்றும், தலையிடக் கூடாத காவல்துறை சும்மா இருக்க வேண்டும் என்றும், எந்த அசம்பாவிதத்திற்கும் தொழிற்சங்கம் இடம் தராமல் அமைதியாக போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE