சென்னை: “தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்காமல், வெறும் ஒப்பந்தங்களை மட்டும் செய்துவிட்டு முதலீடு குவிந்துவிட்டதாக வெற்று விளம்பரங்களைச் செய்து வருகிறார்கள். தொழில் முதலீடு குவிந்திருந்தால் கனிமொழி புள்ளிவிவரங்களைக் கூறட்டும்” என பாமக கூறியுள்ளது. மேலும், அன்புமணி ராமதாஸுக்கு இருப்பது கடமை உணர்ச்சிதான்... காழ்ப்புணர்ச்சி இல்லை” என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு வெளியிடுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்திருப்பதாக புள்ளிவிவரங்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்க முடியாத திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, காழ்ப்புணர்ச்சி காரணமாக அன்புமணி ராமதாஸ் அவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அரசியல் சார்ந்த விமர்சனங்களை ஆதாரங்களுடன் எதிர்கொள்வதற்கு பதிலாக அவதூறு பேசும் கலாச்சாரத்துக்கு கனிமொழியும் அடிமையாகியிருப்பது வருத்தமளிக்கிறது.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டிய தேவை அன்புமணி ராமதாஸுக்கு இல்லை. அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்காமல், வெறும் ஒப்பந்தங்களை மட்டும் செய்து விட்டு முதலீடு குவிந்துவிட்டதாக வெற்று விளம்பரங்களைச் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டால் அதை அம்பலப்படுத்த வேண்டிய கடமை ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்து வருகிறார். அன்புமணி ராமதாஸுக்கு இருப்பது கடமை உணர்ச்சிதான்... காழ்ப்புணர்ச்சி இல்லை.
தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள். தொழில் தொடங்குவதற்கு உகந்த சீர்திருத்தங்களைச் செய்த மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்யவில்லை என்பதால் அந்தப் பட்டியலில் இல்லை. இதை கனிமொழி அவர்களால் மறுக்க முடியுமா? இதில் என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கிறது?
தமிழ்நாட்டிற்கு கடந்த 3 மாதங்களில் வெறும் ரூ.8,325 கோடி மட்டும் தான் வெளிநாட்டு நேரடி முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தான் தமிழக அரசு உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.6.64 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து விட்டதாக திமுக அரசு பெருமைப்பட்டுக் கொண்டது. உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.8325 கோடி என்பது எத்தனை விழுக்காடு என்பதை திமுக பொதுச்செயலாளர் கனிமொழி கணக்கிட்டு , இது பெருமைப்படத்தக்கதா? என்று சொல்லட்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ரூ. 10 லட்சம் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதாக திமுக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், கடந்த 39 மாதங்களில் வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.68,145 கோடி மட்டும் தான். இத்துடன் இதில் பாதியளவுக்கு உள்நாட்டு முதலீடு கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், தமிழகத்தின் மொத்த தொழில் முதலீட்டு வரவு ரூ. 1 லட்சம் கோடி என்ற அளவில் தான் இருக்கும். இது உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 10% மட்டும் தானே? இது பெருமைப்படத்தக்கதா?
துபாய்க்கும், ஸ்பெயினுக்கும் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாடுகளில் இருந்து ரூ.9540 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அந்த நாடுகளில் இருந்து ஒரு பைசா முதலீடு கூட தமிழகத்துக்கு வரவில்லை. ஒருவேளை முதலீடு வந்திருந்தால் அதை வெளியிடுங்கள் என்று கேட்கிறோம். இதில் என்ன காழ்ப்புணர்ச்சி?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாகி விட்டால் ஒரு பேச்சு பேசுவது கனிமொழிக்கு வழக்கம். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடுவதாகவும், அதனால் ஏராளமான ஏழைப் பெண்கள் விதவைகள் ஆவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேடைக்கு மேடை முழங்கினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை; மது வெள்ளமாக ஓடுகிறது; பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆகின்றனர்; ஆனால், அது குறித்த வினாக்களுக்கு விடையளிக்காமல் கனிமொழி தவிர்க்கிறார்.
இப்போதும் சொல்கிறோம்.... திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டுக்கு வந்து செயலாக்கம் பெற்ற தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். பாராட்டத்தக்க அளவுக்கு முதலீடுகள் வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கிடைத்திருந்தால் பாராட்டுகிறோம். மாறாக, வராத முதலீட்டுக்கு வெற்று விளம்பரங்களை செய்து கொண்டிருந்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago