“முதல்வரின் வெளிநாட்டு பயண உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்” - ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், முதல்வர் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டியும், டைட்டானிக் கப்பல் பட ஹீரோ போல் இரு கைகளையும் நீட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியும், சுய விளம்பரம் தேடுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டிற்கு சாதித்தது என்ன? முழு விவரங்களை வெளியிட வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளருக்கு முதல்வரோ, தொழில் துறை அமைச்சரோ பதிலளிக்க திராணியில்லாமல், முந்திரிக்கொட்டை போல் திமுக-வில் தனது இருப்பை காட்டத் துடிக்கும் அட்டைக் கத்தி ஆர்.எஸ். பாரதி-யை அறிக்கை விடவைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

வாய் வீச்சு, அட்டைக் கத்தி பாரதி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். பாரதி, முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு, தான் ஒரு வக்கீலுக்குப் படித்தவர் என்பதையும் மறந்து, நாலாந்தரப் பேர்வழியாக, தான் இன்னும் திமுக-வில் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது உணர்த்தும் விதமாக கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது.

வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் முதல்வர் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டியும், டைட்டானிக் கப்பல் பட ஹீரோ போல் இரு கைகளையும் நீட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி, சுய விளம்பரம் தேடுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதாவது 24.3.2022 முதல் 28.3.2022 வரை துபாய்; 23.5.2023 முதல் 31.5.2023 வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்; 29.12024 முதல் 7.2.2024 வரை ஸ்பெயின் சுற்றுப் பயணம் செய்தும் தற்போது 4-ஆவது முறையாக மேற்கொண்டிருக்கும் அமெரிக்கா சுற்றுப் பயணம், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் குறிப்பிட்டு, முதல்வரின் சுற்றுப் பயணத்தால் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், வேலை வாய்ப்புகள் பற்றி விளக்குமாறும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறும் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியின்போது திமுக அரசின் முதல்வரை வலியுறுத்தினார்.

மேலும், முதல்வர் உடல் நிலையை பரிசோதிப்பதற்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக பொதுமக்களிடத்தில் பரவலாக பேச்சுக்கள் வெளியாவதை சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவதாக ஆந்திரப் பிரதேசம், மூன்றாவதாக குஜராத், நான்காவதாக ராஜஸ்தான், ஐந்தாவது மாநிலமாக திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளன. தமிழகம் இப்பட்டியலில் இடம் பெற்றதாகவே தெரியவில்லை.

10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்தியாவின் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு தற்போது இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதை நேரடியாக ஏற்கவோ, மறுக்கவோ வேண்டிய முதல்வர் ஸ்டாலின் இன்றுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், திமுக-வில் தான் இருக்கிறேன் என்ற போர்வையில், நேரடியாக பதில் அளிக்க வக்கற்ற பாரதி, முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டுவதை பார்க்கவில்லையா என்று எங்கள் கழகப் பொதுச் செயலாளரைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களுக்கு கண்கள் இரண்டும் தெளிவாக இருப்பதால் தான், அமெரிக்காவிலும் மோட்டார் வைத்த சைக்கிளில் மிதிப்பது போன்று முதல்வர் நடிப்பதைப் பார்த்து விமர்சனங்கள் எழுந்துள்ளதை பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஆர்.எஸ். பாரதி அங்கம் வகிக்கும் கட்சியின் தற்போதைய தலைமைக்கு துதிபாடும் கூட்டத்தைப் போன்ற 'கருத்துக் குருடர்கள் நாங்கள் அல்ல.

தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராகத் திகழும் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எகத்தாளமாக 'குருடர் என்று சொன்னதன் மூலம் பார்வையற்ற சமுதாயத்தையே இழிவுபடுத்தியுள்ளார், பித்தம் தலைக்கேறிப் போயுள்ள மதி கெட்ட பாரதி'.

ஆர்.எஸ்.பாரதி முதலில் தனது கண் பார்வையை பரிசோதித்து, முதல்வரின் நான்கு வெளிநாட்டுப் பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு பெற்றுள்ள உண்மையான முதலீட்டைப் பட்டியலிட உங்கள் பொம்மை முதல்வரையோ அல்லது தொழில் துறை அமைச்சரையோ நீங்கள் கேட்டு, உண்மை நிலையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்துகிறேன். பொம்மை முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்.

நீங்கள், எங்களது கழகப் பொதுச் செயலாளரின் கண் பார்வையை மேற்கோள் காட்டி, மாற்றுத் திறனாளிகளை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது. பேசுவதையும் பேசிவிட்டு வாய்மூடி மவுனியாக இருந்து சமாளித்துவிடலாம் என்ற இருமாப்போடு இருந்தால் தக்க பாடம் புகட்டப்படும் என்று எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்