தற்காலிக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு செலுத்திய நிதியை வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: தற்காலிக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு வழங்கிய நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் செட்டிபட்டியைச் சேர்ந்த பாபுஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கால்நடைத் துறையில் 2012-ல் தற்காலிகப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். 2004-ம் ஆண்டு அரசாணையின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனக்கும் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கு எண் வழங்கப்பட்டது. மாதந்தோறும் எனது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை செலுத்திய விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. எனவே, தற்காலிக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய தொகையை திரும்பப் பெறுமாறு 2021-ம் ஆண்டில் நிதித் துறை சிறப்புச் செயலர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, எங்கள் கணக்கில் நாங்கள் செலுத்திய தொகையையும், அரசு செலுத்திய பங்களிப்புத் தொகையையும் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கை தொடர்பாக பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அரசுத் தரப்பில், "தற்காலிக ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். மனுதாரர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டனர். இதை அறிந்தவுடன், தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மனுதாரர்கள் கணக்கில் அரசு செலுத்திய தொகையை கோர உரிமை கிடையாது" என்றார்.

பின்னர் நீதிபதி, "மனுதாரர்கள் கணக்கில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக செலுத்திய தொகையை அரசு திரும்பப் பெறுவது என்பதை ஏற்க முடியாது. மனுதாரர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்தை உரிமையாக கோர முடியாது. ஆனால், அரசு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை, மனுதாரர்களை ஏமாற்றம் அடையச் செய்யும். இது தொடர்பான நிதித் துறை சிறப்புச்செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர்கள் செலுத்திய தொகை, அரசின் பங்களிப்புத் தொகையை, உரிய வட்டியுடன் அவர்களுக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE