சர்ச்சை சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யவில்லை: அசோக் நகர் அரசு பள்ளி மேலாண்மை குழு விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் பள்ளிமேலாண்மைக் குழுவுக்கும் தொடர்பில்லை என்று அதன் தலைவர் சித்ரகலா தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு என கூறப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி ஆக.28-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் மகாவிஷ்ணு என்பவர் பங்கேற்று பல்வேறு கருத்துகளை பேசினார். அப்போது அவர் பெண்கள், மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகின.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனுடன், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த குழு தனது அறிக்கையை இன்று (செப்.9) சமர்ப்பிக்க உள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தரப்பட்டுள்ளன. இதற்கிடையே சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுவதற்கு மகாவிஷ்ணுவை பள்ளி மேலாண்மைக் குழுவினரே (எஸ்எம்சி) பரிந்துரை செய்ததாக அசோக் நகர்பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பள்ளி மேலாண்மைக் குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எஸ்எம்சி குழுவின் தலைவர் சித்ரகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த பள்ளியில் எஸ்எம்சி குழுவுக்கான மறுகட்டமைப்பு தேர்தல் கடந்த ஆக.24-ம் தேதிதான் நடைபெற்றது. இந்தக் குழு தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.

நான் உட்பட எங்கள் குழுவினருக்கு மகாவிஷ்ணு சொற்பொழிவு குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனவே, பள்ளி மேலாண்மைக் குழு தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது என்பது தவறான செய்தி. மேலும், மறுகட்டமைப்பு தேர்தல் முடிந்தும் எஸ்எம்சி கூட்டம் இதுவரை கூட்டப்படவில்லை.

அதேபோல், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல், பள்ளி வளாகத்தில் ஏதேனும் பிரச்சினை நடைபெற்றால் அதை தீர்த்து வைப்பது ஆகியவைதான் எங்கள் குழுவின் பணியாகும். இத்தகைய நிகழ்ச்சிகளை பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது என்பதே எங்களின்நிலைப்பாடாகும். இதுசார்ந்து சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE