‘தி கோட்’ திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தியது மன்னிக்க முடியாதது: நடிகர் விஜய்க்கு பாஜக நிர்வாகி கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தி கோட்’ திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தியது மன்னிக்க முடியாதது என நடிகர் விஜய்க்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் 'தி கோட்' படம் பார்த்தேன். இந்தபடத்தில் ஒரு காட்சி என் மனதைமிகவும் காயப்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் செல்போன் திருடனாக நடித்துள்ள யோகிபாபுவிடம், செல்போனை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும்போது, நான் காந்தி என்று உங்கள் பெயரை கூறும்போது, பதிலுக்கு யோகிபாபு நீ காந்தி என்றால் நான் சுபாஷ் சந்திர போஸ் என்கிறார்.

இது இயல்பான கிண்டலாக இருக்கலாம். சுதந்திரம் என்ற லட்சியத்துக்காகவே மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் போராடினார்கள். ஆனால், இருவரின் பாதைகளும் வேறுவேறாக இருந்தன. அதனால் மகாத்மா காந்தியையும், நேதாஜியையும் நேர் எதிரெதிரானவர்போல காட்டியிருக்கிறீர்கள். திருடன் கதாபாத்திரத் துக்கு கிண்டலுக்காககூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்க கூடாது.

இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்படக்கூடிய காட்சிஅமைப்பை உருவாக்கி, மன்னிக்கமுடியாத தவறை தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்டீர்கள். நேதாஜி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் தாமதமாகியிருக்கலாம்.

அவரின் பெயரை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ‘தி கோட்’ படத்தில் சுபாஷ் சந்திரபோஸ்பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படாமல் நீங்களும் படக் குழுவும்தவிர்த்திருக்கலாம். இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன்மையானவர்.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அவருடைய வீரத்தின் பெருமையை, தேசப்பற்றை, ஏக வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும். அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று பேசி வரும் வேளையில் இதற்கு நேர்மாறாக அவருடைய பெருமையை சிறுமைப்படுத்தும் விதமாக ‘கோட்’ திரைப்படத்தில் ஒரு செல்போன் திருடனுக்கு அவருடைய பெயரை சூட்டியது மிகப்பெரிய தவறு.

அவமானப்படுத்தும் செயல்: மேலும் அந்த காட்சிகளில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்று நகைச்சுவைக்காக பாத்திரங்களின் பெயரை பயன்படுத்தி இருப்பது சுதந்திர போராட்ட வீரர்களை, நாட்டின் தலைவர்களை அவமானப்படுத்தும் செயல். திரைப்பட காமெடி என்கிற மிகக் குறுகிய வட்டத்தில் அவரின் புகழை கெடுப்பது போன்ற காட்சிகளை நடிகர் விஜய் அவர்களின் ‘கோட்’ படத்தில் உருவாக்கப்பட்டது மன்னிக்க முடியாத தவறு என்பதை நடிகர் விஜய்யும், படக் குழுவினரும் இயக்குநரும் படத் தயாரிப்பாளரும் உணர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE