“விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்” - மதுரையில் துரை வைகோ எம்.பி கருத்து

By கி.மகாராஜன் 


மதுரை: நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவரால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தான் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறினார்.

மதுரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகளான மதுரையைச் சேர்ந்த பச்சமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோர் குடும்பத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ரூ.45 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக ஆளுநர் ரவி பதவியேற்ற நாளிலிருந்து ஆளுநராக செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தமிழக கல்வி முறையை தொடர்ந்து குறை கூறி வருகிறார். சர்வதேச அளவில் சிறந்த கல்வி முறை தமிழக கல்வி முறையாகும்.

தமிழக பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள், உலக புகழ்பெற்ற மருத்துவர்களாக இருக்கின்றனர். தற்போது தமிழக பாடத்திட்டம் சிபிஎஸ்இ தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளுநர் வேண்டும் என்றே தமிழக கல்வி முறையை குறை சொல்லி வருகிறார். இதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் மகாவிஷ்ணு சனாதனம் குறித்து பேசி அவரது கருத்தை திணித்து வருகிறார். பெண்கள் கல்வி கற்கக்கூடாது, வீ்ட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை பேசி வருகிறார். மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு சனாதன சொற்பொழிவு.

தமிழகத்தில் மீனவர்கள் பிரச்சினை 40 ஆண்டுகாலமாக உள்ளது. இதற்கான விடை மத்திய அரசிடம்தான் உள்ளது. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சரிடம் நான் பேசியுள்ளேன். மத்திய அரசு இலங்கை அரசை பணிய வைக்க வேண்டும். நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவரால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம். ஆனால் நடைமுறை அரசியல் ரொம்ப கடினமானது. இதை கடந்து வரவேண்டும். அவரது கோட்பாடுகள் திராவிடத்தை சார்ந்து தான் உள்ளது” இவ்வாறு துரை வைகோ கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE