சென்னை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் சிறப்புகளை எடுத்து கூறுகிற வகையில் ஒரு வார காலத்திற்கு தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய விடுதலை போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி விடுதலை, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, நிர்மாணத் திட்டங்கள் என அனைத்து நிலைகளிலும் சமூக ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தினார். ஆனால் அதே நேரத்தில் மத ரீதியாக மக்களிடையே வெறுப்பை வளர்த்து, மதக் கலவரத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற முயற்சியில் வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக செயல்பட்டது.
இதன் விளைவாக ஏக இந்தியா விடுதலை பெறுவதற்கு பதிலாக பாகிஸ்தான் பிரிவினைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. காலமெல்லாம் அகிம்சை வழியில் போராடிய காந்தியடிகளை வகுப்புவாத சக்திகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட நாதுராம் கோட்சே உள்ளிட்ட தீவிரவாதிகளின் பயங்கரவாத செயலுக்கு பலியாக்கினார்கள். இந்த பின்னணியில் தான் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டார்கள்.
இந்தியாவில் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சுதந்திர இந்தியா காணாத அளவுக்கு வகுப்புவாத பாஜக 2014ல் அறுதி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்து 10 ஆண்டு காலம் மோடி தலைமையில் மக்கள் விரோத ஆட்சி செயல்பட்டது. மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களிடையே வெறுப்பையும், துவேஷத்தையும் வளர்த்து வாக்கு வங்கியை விரிவுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டது.
மக்களை பிளவு படுத்துகிற அரசியலுக்கு எதிராக நாட்டில் வெறுப்பை வேரறுக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 2023, ஜனவரி 30ம் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார் ராகுல் காந்தி. 4,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்த இந்த நடைப்பயணத்தில் அரசியல் தலைவர்கள், பல்துறை சான்றோர்கள், சாதனையாளர்கள் உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியோடு நடைப்பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
இந்த பயணத்தின் மூலம் வகுப்புவாத சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு பதிலாக அன்பையும், சமூக ஒற்றுமையையும் பரப்பி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றார். எந்த நவகாளியில் காந்தியடிகள் தமது நடைப் பயணத்தின் மூலம் 240 மைல் நடந்து வெறுப்புத்தீயை அணைத்தாரோ அதைப் போலவே பாஜகவின் வெறுப்பு அரசியலை முறியடித்த பெருமை தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு உண்டு.
நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்திய ஒற்றுமை பயணத்தின் அடுத்த கட்டமாக வகுப்பு கலவரத்தால் கொழுந்துவிட்டு எரிந்த மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தில் 6,000 கிலோ மீட்டர் தூரத்தில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினார். மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். மக்களின் துன்பங்களை முழுமையாக அறிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டது.
பண்டித நேரு இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை கண்டு உணர்ந்து நூலாக எழுதினர். அதே நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தி மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக அவர்களின் பிரச்சினைகளை கண்டுணர்ந்து அதற்கான தீர்வு குறித்து நிறைய கனவுகளோடு தமது இரண்டாவது கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.
தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு பயணங்களின் வெற்றியின் காரணமாக 10 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட இண்டியா கூட்டணி உருவாகிற நிர்பந்தத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை உருவாகி கடந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி ஆட்சி அமைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் மக்களவை எண்ணிக்கையில் 40 சதவீத இடங்களை இந்தியா கூட்டணி பெற்று அதன் சார்பான எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று கடந்த இரண்டு மக்களவை கூட்டத் தொடரிலும் மோடி ஆட்சிக்கு எதிராக ஏவுகணை போன்ற அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்தார். அவற்றை எதிர்கொள்ள முடியாமல் மோடி உள்ளிட்ட பாஜகவினர் திக்குமுக்காடியதை தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக மக்கள் பார்த்து உண்மை நிலையை அறிந்தனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிகழ்த்திய கருத்து மோதலில் அவர் எடுத்து வைத்த கூர்மையான வாதங்களை பாஜக-வினரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதன் மூலம் மோடியின் சர்வாதிகார செயல்பாட்டிற்கு எதிராக ஜனநாயகத்தை செழுமைப்படுத்துகிற பணியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். இதன் மூலம் வருகிற காலங்களிலே வகுப்புவாத சக்திகளின் மக்களை பிளவு படுத்துகிற அரசியல் முறியடிக்கப்பட்டு ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய லட்சியங்களை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, ராகுல் காந்தி இரண்டு நடைப் பயணங்கள் மூலமாக 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து தம்மை வருத்திக்கொண்டு நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டதை நினைவு கூறுகிற வகையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது யாத்திரையின் மூலம் சமூகத்தை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை தமிழ்நாடு காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் சிறப்புகளை எடுத்து கூறுகிற வகையில் ஒரு வார காலத்திற்கு மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம அளவில் தெருமுனை கூட்டங்களை நடத்தி பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago