திருத்தணி தீ விபத்து | பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

By இரா.நாகராஜன்

திருத்தணி: திருத்தணியில் வீட்டு வளாகத்தில் மர்மமான முறையில் 3 மோட்டார் சைக்கிள்களில் பற்றிய தீயால் ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள தாழவேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (32). ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வரும் இவர், மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன், திருத்தணி முருகப்பா நகரில் மகேந்திரன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் வளாகத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களில் கடந்த 6- ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பற்றியது.

இதனால், அந்த மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்குகள் வெடித்துச் சிதறின. இதையடுத்து, வீட்டு வளாகம் முழுவதும் புகையால் சூழப்பட்டது. அந்த புகை, பிரேம்குமார் வசித்த குடியிருப்பினுள் பரவியதால், பிரேம்குமார், தனது மனைவி மஞ்சுளா (31), குழந்தைகள் மிதுலன் (2), நபிலன்(1) ஆகியோருடன் குடியிருப்பில் இருந்து வெளியேற முயன்றார். அப்போது, பிரேம்குமார் வீட்டின் படிக்கட்டுகள் வழியாக வீட்டு வளாகத்தின் முன் பகுதிக்கு வரும் போது, பதற்றம் காரணமாக படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார்.

இதனால், பிரேம்குமார் உள்ளிட்ட 4 பேரும் தீயில் சிக்கி, தீக்காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 6ம் தேதி காலை குழந்தை நபிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, ஆபத்தான நிலையில் பிரேம்குமார் உள்ளிட்ட 3 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதியம் பிரேம்குமாரின் மற்றொரு குழந்தையான மிதுலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேம்குமாரும், அவரது மனைவி மஞ்சுளாவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, பிரேம்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா? மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததால் ஏற்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE