சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை (செப்.7) அன்று கைது செய்த போலீஸார், அவர் மீது மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
விமான நிலையத்தில் கைது: மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 192, 196 (1) a, 352, 353 (2) மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 92 (a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» தண்டனை பெண் கைதி மரணம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
» யானை முகத்னோனுக்கு யானைகள் பூஜை: முதுமலையில் சதுர்த்தி விழாவை ரசித்த சுற்றுலாப் பயணிகள்
சர்ச்சை பேச்சு: முன்னதாக, சென்னை - அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட்28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்து கொண்ட மகாவிஷ்ணு , பாவ - புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்றும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்ற மாற்றுத் திறன் ஆசிரியருடன் மகாவிஷ்ணு வாக்குவாதமும் செய்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாணவர்களை தவறாக வழிநடத்துவதா என கேள்வி எழுப்பி, அசோக் நகர் பள்ளி முன்பு, பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச் சூழலில், பள்ளிக் கல்வி துறை சார்பில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத் திறன் ஆசிரியர் சங்கருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியபோது, இந்த விவகாரம் தொடர்பாகபள்ளிக்கல்வி துறை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதுதுறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும். என்னுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அவரை பேச அனுமதித்ததாக கூறுவது தவறான செய்தி என்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு, 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் பள்ளிக் கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி, திருவள்ளூர் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டுஅணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
‘பரம்பொருள்ஃபவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28-ம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவின்போது, மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில்பேசியுள்ளார். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படியும் மகாவிஷ்ணுவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.இது தொடர்பாக தஞ்சையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சனிக்கிழமை (செப்.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மகாவிஷ்ணு கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாக அந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். அந்த பிரச்சினைக்கு என்ன தீர்வோ, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு, நான் எனது அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவேன். எனவே, அந்த விவகாரம், தற்போது காவல்துறை வசம் சென்றுள்ளது. காவல் துறையினர், அதற்கான நல்ல முடிவை எடுப்பார்கள்.” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago