‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ - மகாவிஷ்ணு கைது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் @ தஞ்சை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: “மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மகாவிஷ்ணு அவமானப்படுத்திவிட்டதாக கூறி பெரிய புகாரை அளித்துள்ளனர். எனவே இந்த பிரச்சினையை இனி காவல் துறையும், புகார்தாரர்களும் பார்த்துக் கொள்வார்கள். அவர் மீது தவறு உள்ளதா, இல்லையா என்பதில் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

தஞ்சையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (செப்.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மகாவிஷ்ணு கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாக அந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். அந்த பிரச்சினைக்கு என்ன தீர்வோ, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு, நான் எனது அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவேன். எனவே, அந்த விவகாரம், தற்போது காவல்துறை வசம் சென்றுள்ளது. காவல் துறையினர், அதற்கான நல்ல முடிவை எடுப்பார்கள்.” என்றார்.

“என் மீது எந்த தவறும் இல்லை, அமைச்சர் என் மீது பழி சுமத்துகிறார் என்று மகாவிஷ்ணு கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு” இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மகாவிஷ்ணு அவமானப்படுத்திவிட்டதாக கூறி பெரிய புகாரை அளித்துள்ளனர். எனவே இந்த பிரச்சினையை இனி காவல்துறையும், புகார்தாரர்களும் பார்த்துக்கொள்வார்கள். அவர் மீது தவறு உள்ளதா, இல்லையா என்பதில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

தமிழக முதல்வர் இதுதொடர்பாக ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். காரணம் இதுபோன்ற சம்பவங்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாக நடந்து மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. நம்மைப் பொறுத்தவரை, சாதி, மதம் பார்க்காத அமைதியான மாநிலமாக இருக்கும்போது இதுபோல மூடநம்பிக்கையைத் தூண்டுகிற வகையில் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய மிகப்பெரிய கடமை. ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டும், என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கிறது. எனவே, அதை பின்பற்றித்தான், தமிழக முதல்வர் அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் இடையில், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு சர்ச்சை எழுந்த நிலையில், அடுத்த நிமிடமே முதல்வரிடம் இருந்து ஓர் அறிக்கை வந்தது.

பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகளில் யார் யார் பேச வேண்டும், என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை வகுக்க இருப்பதாக கூறியிருந்தார். மிக விரைவில் அதற்காக ஒரு குழுவை அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வோம்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ‘தன்னம்பிக்கை பேச்சாளர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த போலீஸார், அவர் மீது மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். | முழு விவரம்: மகாவிஷ்ணு கைது: 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE