“எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இல்லை” - ஆர்.எஸ்.பாரதி சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்றாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதல்வரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது என்று திமுக அமைப்புச் செயலாளர் பதில் அளித்துள்ளார். 75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதல்வரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , “சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்” எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.முதல்வராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி-யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதல்வராகப் பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?

பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவருடைய கோஷ்டியினர் கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு 2018-ல் கைதானார்கள். கள்ளநோட்டு கும்பலுடன் பழனிசாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்குச் சந்தி சிரித்தபோது அவர் எங்கே போனார்?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சீட் கொடுத்தது பொதுச் செயலாளர் பழனிசாமிதானே?

“சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்” எனச் சொல்லும் பழனிசாமி, ஆனந்த், ஹரிதரன் ஆகியோரது செயல்களுக்கும் பொறுப்பு ஏற்றாரா? “அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமை இல்லை. எங்களுக்கு மரியாதை, தனித்துவம் உள்ளது” எனப் பெருமை பேசியிருக்கிறார். “அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை” என்றால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் டெல்லிக்கு ஏன் காவடி தூக்கினீர்கள்?

கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்து நீக்குவார்; கட்சியை விட்டு கட்டம் கட்டுவார்; எம்எல்ஏ பதவியை எல்லாம் பறித்ததில்லை. ஆனால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை நீக்கிய நீங்கள் அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை என்று சொல்ல நா கூசவில்லையா? தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு, அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றவில்லையா?

“அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் போலீஸுக்கே பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது” என பழனிசாமி புலம்பியிருக்கிறார். பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க முயன்றபோது திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். ஆனால், ‘சாமளாபுரத்தில் பெண்கள்தான் போலீஸை தாக்கினார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது’ என்று அன்றைக்கு வியாக்கியானம் பேசியவர்தான் பழனிச்சாமி.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுக்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளியது யார்? உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்ல, போலீஸாரால் போலீஸுக்கே பாதுகாப்பில்லாமல் போனது எல்லாம் ‘செலக்டிவ் அம்னீஷியா’ போல் மறந்துவிட்டதா?

“உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்கவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள்” என உளறிக் கொட்டியிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோவில் இருந்த போது ஆரம்பித்த உளறல்களை இன்னுமா நீங்கள் நிறுத்தவில்லை?

மறைந்த முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. புகைப்படங்களும் வெளியிட்டோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதை இன்றும் இணையத்தில் தேடிப் படிக்கலாம். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதல்வரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.

75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதல்வரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்’ என எம்ஜிஆர் பாடிவிட்டு போனது பழனிசாமிக்குத்தான். “இட்லி சாப்பிட்டார்கள்... வார்டுக்கு மாறிவிட்டார்கள்... விரைவில் வீடு திரும்புவார்கள்” என அதிமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் பொய் பூக்களைக் கோத்து, கதை மாலையைக் கட்டியதை போல எங்களுக்குக் கட்ட தெரியாது. திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை.

‘ஜெயலலிதா மயக்கமான பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக்கப்பட்டன. ஆஞ்சியோ பரிந்துரைக்கப்பட்டும், அதனை அப்பல்லோ வழங்காத வகையில் சசிகலா உள்ளிட்ட 5 பேர் திட்டமிட்டுச் செயல்பட்டனர். முதல்வர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். அவர் இறந்த தேதியே தவறு. ஜெயலலிதா இறப்பை மறைத்து, அறிவிப்பைத் தாமதப்படுத்தத் தந்திர நடவடிக்கை’ என்றெல்லாம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அக்கு வேறாகப் பிரித்தார்கள்.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என்ற திருவள்ளுவரின் குரலை மேற்கோள் காட்டி, வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்’’ என நீதிபதி ஆறுமுகசாமி குறிப்பிட்டார். அந்த நரிகள் கூட்டம் எங்கள் தலைவரின் உடல்நிலையைப் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறதா?

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தனது ஆட்சியில் தமிழகத்தை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது. தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்