“இந்து மத பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்”- வானதி சீனிவாசன் 

By இல.ராஜகோபால்

கோவை: முதல்வர் ஸ்டாலின் “இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்,” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்.7) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று விநாயகர் சதுர்த்தி. முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகெங்கும் வாழும் இந்துக்கள் தங்கள் வாழ்வின் எந்த செயலையும் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டுதான் தொடங்குவார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பாலகங்காதர திலகர் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கினார்.

அன்று தொடங்கிய விநாயகர் ஊர்வலம் நாடெங்கும் பெரும் எழுச்சியோடு நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த எழுச்சியைத் தடுக்க விநாயகர் சதுர்த்தி ஊரவலங்களுக்கு எந்தெந்த வழிகளில் நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ அத்தனையையும் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் திமுக அரசு செய்து வருகிறது. வழிபாட்டு உரிமை என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம் என கூறிக் கொண்டே, அரசியலமைப்புக்கு எதிராக இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கிறது திமுக அரசு. இது கடும் கண்டனத்துக்குரியது.

திமுகவுக்கு இந்து மதத்தின் மீது, இந்து கடவுள்களின் மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், அரசு என்பது அனைவருக்குமானது. திமுக தலைவராக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால், அனைவருக்கும் பொதுவான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்.

விநாயகர் சதுர்த்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், முதல்வராக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய முதல்வர் ஸ்டாலின் இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE