கிளாம்பாக்கத்தில் குவிந்த மக்கள்: விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர் செல்ல பேருந்துகள் கிடைக்காமல் அவதி

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர் செல்ல ஏராளமான பொதுமக்கள் கிளாம்பாக்கத்தில் குவிந்த நிலையில் போதிய பேருந்துகள் கிடைக்காமல் அவதியடைந்தனர்.

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக கடந்த 4-ம் தேதி, விரைவு பேருந்துகளின் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்ற பேருந்துகளில் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்றும் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கிளாம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு வரை பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

அவ்வப்போது வந்த பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு இடம் பிடிக்க முயன்றனர். நேரம் செல்லச் செல்ல பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

ஆனால், திருச்சி, தஞ்சாவூர்‌, ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என‌க் கூறி போலீஸாருடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். நள்ளிரவு ஒரு மணியை கடந்தும் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE