‘ரூட் தல’ பிரச்சினை உட்பட கல்லூரி மாணவர் மோதலை தடுக்க சென்னை போலீஸார் புது வியூகம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கல்லூரி செல்லும் சில மாணவர்கள் பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், சாகசம் என்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும் ஆபத்தான பயணம் செய்கின்றனர். மேலும், பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்கள் மீது அவ்வப்போதுகாவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.

இருப்பினும் தொடர்ந்து அடிதடி, மோதல், தகராறு போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்நிலையில், மாணவர்கள் மோதலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கி உள்ளனர்.

அதன்படி, பிரச்சினை செய்யும் மாணவர்கள், ரூட் தலமாணவர் என அனைவரின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதை அடிப்படையாக வைத்து எந்த மாணவர் தகராறில் ஈடுபடுவார் என அறியப்படுகிறாரோ, அவரது வீட்டுக்கு போலீஸார் சென்று பெற்றோரிடம் அதுகுறித்து தெரிவிக்க உள்ளனர்.

ஏனென்றால் பல பெற்றோருக்கு பிள்ளைகளின் வெளி நடவடிக்கைகள் தெரிவது இல்லை. அப்படி தெரியும்பட்சத்தில், அவர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்தி வைப்பார்கள். இதன்மூலம் மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும் என போலீஸார் நம்புகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE