தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டம்: 8 மாநில ஆய்வக நுட்புநர்களுக்கு சென்னை ஆய்வகத்தில் பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்ககத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில், தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற 8 மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்புநர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி பாசறை நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வகத்தை பார்வையிட்டு, ஆய்வக நுட்புநர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி,ஆய்வக கையேட்டை வெளியிட்டார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர் விஜயலட்சுமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நியூட்ரீஷன் இன்டர்நேஷனல் நடத்திய இந்திய அயோடின் கணக்கெடுப்பில் 76 சதவீதம் பேர் மட்டுமே போதுமான அளவு அயோடின் கலந்த உப்பை உட்கொள்வதாக தெரிய வருகிறது. அயோடின் அத்தியாவசியமான ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். ஒரு நாளைக்கு 100 முதல் 150 மைக்ரோகிராம் வரையிலான அயோடின் மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.

அயோடின், தைராய்டு ஹார்மோன் உருவாக்குதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கருச்சிதைவு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்களில் மூளை வளர்ச்சியின் பெரும்பகுதி அயோடினை சார்ந்தே நடைபெறுகிறது.

முன்மாதிரியான தமிழகம்: தமிழகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்ற காரணத்தால், தமிழகத்தில் தேசியஅயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு என பிரத்யேகமாக மாநில அயோடின் ஆய்வகம், மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆய்வகத்தில் பிற மாநிலங்களில் இயங்கிவரும் மாநில அயோடின் ஆய்வகங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்புநர்களுக்கு 4 நாட்கள் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் பயிற்சி பட்டறை வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் என 8 மாநிலங்களிலிருந்து வந்துள்ள 22 ஆய்வு நுட்புநர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் இந்த பயிற்சிகள் கொண்டு சேர்க்கும் வகையில், பொது சுகாதாரத்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இப்பயிற்சிக்குரிய ஆய்வக இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE