மாநகராட்சியின் 871 பூங்காக்களில் தீவிர தூய்மைப்பணி: குறைகளை கண்டறிந்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் நேற்று தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பூங்காக்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அந்த விவரங்களை மாநகராட்சி பூங்கா துறைக்கு அனுப்புமாறு மேயர் ஆர்.பிரியா, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப, ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஜூலை 22-ம் தேதி இரவு முதல் மாநகராட்சி சார்பில் இரவு நேர தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பிரதான சாலைகளில் தூய்மைப் பணி நிறைவுற்ற நிலையில் உட்புற சாலைகளிலும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் 1,265 பேருந்து நிறுத்தங்களில் கடந்த ஆக.21-ம் தேதி தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு சொந்தமான, நேரடி பராமரிப்பில் உள்ள 165 பூங்காக்கள், தனியார் தத்தெடுத்து பராமரித்து வரும் 88 பூங்காக்கள், வெளி நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் 616 பூங்காக்கள், மெட்ரோ ரயில் நிறுவனம் பராமரிக்கும் 2 பூங்காக்கள் என மொத்தம் 871 பூங்காக்களில் நேற்று ஒரே நேரத்தில், தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கோடம்பாக்கம், சிவன் பூங்காவில் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்பூங்காவில் சிறு நூலகத்தையும் மேயர் பிரியா திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த தூய்மைப் பணிகளின்போது, பூங்காக்களில் உள்ள நடைபாதை சேதம், செயற்கை நீரூற்று செயல்படாமல் இருப்பது உள்ளிட்ட குறைபாடுகளை அதிகாரிகள் கண்டறிந்து, மாநகராட்சி பூங்கா துறைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். இந்த ஆய்வின்போது, விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE