விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா இன்றுகோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர்சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்தகேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனைக்காக விதவிதமான விநாயகர் சிலைகள் குவிந்துள்ளன. வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமின்றி, களிமண் விநாயகர் சிலைகளும் ஆங்காங்கே விற்கப்பட்டு வருகின்றன.

பூஜை பொருட்கள் வாங்குவதற்கு நேற்று மாலை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது இடங்களில் பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 1,519 பெரிய அளவிலான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உள்பட 5,501 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பெரிய மற்றும் சிறிய அளவிலான 1.50 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்க டிஜிபி சங்கர் ஜிவால் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சென்னையில் பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், செப்.11 மற்றும் 14, 15-ம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. சிலைகள் கரைப்பது தொடர்பாக போலீஸார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீஸாரும், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE