அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரானசொத்து குவிப்பு வழக்குகளின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை 2 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2006-11 திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தற்போதைய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அதிமுக ஆட்சியின்போது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்குகளில் இருந்துஅமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 2 அமைச்சர்கள் உள்ளிட்டோரை விடுவித்து ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் செப்டம்பர் 9-ம் தேதியும், அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் செப்டம்பர் 11-ம் தேதியும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். இந்த வழக்குகளில் கீழமை நீதிமன்றம் தினந்தோறும் என்ற அடிப்படையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து2 அமைச்சர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹ்தகி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை 2 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE